நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
முத்தூர்
முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
பவானிசாகர் அணை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் வரை கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்ன முத்தூர், ஊடையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பு அளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன.
திருந்திய நெல் சாகுபடி
மேலும் இப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேளாண்மைத்துறை பரிந்துரை செய்த குறைந்த செலவிலும், நீர் நிர்வாகத்திலும் அதிக மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி பணிகளும் மற்றும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண முறையிலான நெல் சாகுபடி பணிகளும் முழுவீச்சில் தொடங்கப்பட்டு நடைபெற்றன.
இதன்படி நெல் நாற்றுக்கள் சேற்று உழவு பணிகள் மூலம் நடப்பட்டு பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உர மேலாண்மை, களை எடுத்தல், நீர் மேலாண்மை ஆகிய பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வேளாண் வயல்களில் நெல் நாற்றுகளாக நடப்பட்ட நெற்பயிர்கள் பச்சை, பசேல் என்று கடந்த 6 மாதங்களாக நன்கு வளர்ந்து அதில் நெல் மணிகள் உருவாகி பழுப்பு நிறத்திற்கு மாறி அறுவடைக்கு தயாராக இருந்தன.
அறுவடை பணிகள் தொடக்கம்
இந்த நிலையில் இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதன்படி திருப்பூர், ஈரோடு. கரூர், தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த கூலி ஆட்கள், சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் நெல் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கடந்த வாரம் முதல் புதிதாக திறக்கப்பட்டு உள்ள அரசு நேரடி 3 நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு சென்று விற்று பலன் அடைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
ரூ.35 ஆயிரம் முதலீடு
இதுபற்றி இப்பகுதி சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு முடிவு பெற்றுள்ளன. இதன்படி சம்பா நெல் பயிர் சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு வயல் சமன் செய்தல், விதை நெல், நாற்று நடுதல், உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை என பல்வேறு நிலைகளுக்கு முதலீட்டு செலவாக ரூ 35 ஆயிரம் வரை ஆகி உள்ளது.
மேலும் இப்பகுதி அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஒரு கிலோ நெல் சன்ன ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.21.60-க்கும், மோட்டா பொது ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.21.15-க்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு இந்த ஆண்டு நஞ்சை சம்பா பருவத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டு இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் அறுவடை பணிகளை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.