வயல்களில் எந்திரம் -ஆட்கள் மூலம் அறுவடை பணிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் எந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் எந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முப்போக நெல் சாகுபடி
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முன்னதாகவே மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர்.திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழைக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் போட்டு பராமரித்து வந்தனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்க்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது.
அறுவடை எந்திரம்
ஒருசில இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வந்தனர். மழையால் பயிா்களை இழந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.மேலும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மீதமுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை பணி நடந்து வருகிறது. திருவாரூரில் ஒரே நேரத்தில் பல இடங்களில் அறுவடை தொடங்கி உள்ளதால் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆட்கள் மூலம் அறுவடை
வயலில் அதிக தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் டயர் அறுவடை எந்திரம் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருசில இடங்களில் சங்கிலி அறுவடை எந்திரம் மூலம் அறுவடை நடந்து வருகிறது. எந்திரங்கள் பயன்படுத்த முடியாத வயல்களில் விவசாயிகள் ஆட்களை வைத்து அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் காலதாமதம் ஆனாலும் பெரும்பாலான வயல்களில் ஆட்களை வைத்தே அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
மகசூல் குறைவு
ஆட்களை வைத்து அறுவடை செய்யும் நெற்கதிர்களை கற்றைகளாக கட்டி வைக்கோலுடன் தலையில் சுமந்து வயல்பகுதியில் உள்ள சாலையோரத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்கள் அதனை கையால் அடித்து நெல்மணிகள் மட்டும் பிரிக்கப்பட்டு பின்னர் இயற்கை முறையில் முறம் கொண்டு நன்கு காற்றில் தூற்றப்பட்டு நெல்மணிகள் மூட்டையாகக் கட்டப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஒரு சிலர் சாலையில் நெற்கதிரை அப்படியே போட்டு சென்று விடுகின்றனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நெற்கதிர் மேலே ஏறி சென்று வரும் நிலையில் நெல்மணிகள் தனியாக பிரிந்த பின்னர் முறம் கொண்டு தூற்றி மூட்டையில் கட்டி கொண்டு செல்கின்றனர்.
ஆட்கள் மூலம் அறுவடை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த வருடம் சம்பா நெற்பயிர் சாகுபடி தீவிரமாக செய்து கொண்டிருந்தபோது தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நெற்பயிர் ஒரு பகுதி சேதமாகி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. மீதிஉள்ள நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையால் ஆட்கள் வைத்து அறுவடைசெய்து வருகிறோம்.கொள்முதல் பணி தீவிரமாக நடந்து வருவதால் எந்திரங்கள் போதிய அளவு கிடைக்கவில்லை. மழையால் கடந்த ஆண்டை விட மகசூல் குறைந்து விட்டது. செலவு மற்றும் கூலியை ஒப்பிட்டு பார்க்கும்போது விவசாயிகளுக்கு இந்த வருடம் சிறிதுகூட லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றார்.