நெல் அறுவடை பணிகள் தொடங்கியது


நெல் அறுவடை பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே நெல் அறுவடை பணிகள் தொடங்கியதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை அருகே நெல் அறுவடை பணிகள் தொடங்கியதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போக சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பருவ மழை எதிர்பார்த்த அளவு பொய்யாதது, பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல், அதிக படியான பூச்சி கொல்லிகள் பயன்பாடு போன்றவற்றினால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

அறுவடை தொடங்கியது

நாகை அருகே வடகுடி, பாலையூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மும்முரமாக அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாட்டு தீவனத்துக்காக வைக்கோல் தேவைப்படும் விவாசாயிகள் எந்திரத்தை பயன்படுத்தாமல், ஆட்களை வைத்து அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்த நெல்லை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டி காய வைத்துள்ளனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், குறைந்த விலைக்கு நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து வடகுடியை சேர்ந்த விவசாயி யுவராஜ் கூறுகையில்,

குறைந்த விலைக்கு விற்பனை

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது நெற்பயிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. கடும் பனிப்பொழிவு பூச்சி தாக்குதல், உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி நெற்பயிர்களை அறுவடை செய்துள்ளோம்.

அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்கு போதிய கலன்கள் இல்லாததால், சாலையில் போட்டு காயவைத்து வருகிறோம். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாதபடி பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தாலும், பராமரிப்பு, இடுபொருள் செலவுகள் அதிகமாகி விட்டன. இவ்வளவு கடினங்களையும், தாண்டி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எங்கள் பகுதியில் திறக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்க வேண்டிய அவல நிலை உள்ளது.

கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்

கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் எங்களுக்கு அதனை திருப்பிக் கொடுக்க வேறு வழி இல்லாமல், வியாபாரிகளிடம் நெல்லை விற்க வேண்டியது உள்ளது. கடந்த ஆண்டு போல பருவம் தப்பிய மழை பெய்தால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். முதல் கட்டமாக எந்தெந்த பகுதிகளில் அறுவடை நடக்கிறதோ அந்த பகுதியை கணக்கிட்டு திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story