எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தம்


எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் பகுதியில் எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தமாக நடைபெற்று வருகிறது.

18 ஆயிரம் எக்டேர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் இந்த ஆண்டு 18 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை ஓரிரு நாட்கள் அதிகம் பெய்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிர்கள் பல நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடந்தன.

தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பதும் பின்னர் வடிவதுமாக இருந்ததால் சம்பா நெற்பயிர் 60 சதவீதம் மழை நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தது.

நெல் அறுவடை

மழைநீர் வடிந்த பிறகு மீதமுள்ள நெற்பயிரை விவசாயிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் செலவு செய்து உரமிட்டு், பூச்சி மருந்து தெளித்து பயிரை பராமரித்தனர். விவசாயிகள் தீவிர முயற்சியின் பலனாக நெற்பயிர் ஓரளவுக்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரானது.

தற்போது கொள்ளிடம் பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பெரும்பாலான விவசாயிகள் எந்திரங்கள் மூலமாக அறுவடை செய்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் அறுவடை நடந்து வருகிறது.

விவசாயிகள் தவிப்பு

இதன் காரணமாக அறுவடை எந்திரங்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. ஒரே நேரத்தில் அறுவடை நடைபெற்று வருவதால் அதிக எண்ணிக்கையில் அறுவடை எந்திரங்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். அறுவடை பணிகளும் மந்தமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'கொள்ளிடம் பகுதியில் ஒரே நேரத்தில் பரவலாக அறுவடை நடந்து வருகிறது. எந்திரங்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக எந்திரங்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் கிடைக்கவில்லை. எனவே வேளாண் பொறியியல் துறை சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் அறுவடை எந்திரங்களை உடனடியாக வாடகைக்கு அனுப்பி அறுவடையை துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.


Next Story