களம் இல்லாததால் சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் நெல்


களம் இல்லாததால் சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் நெல்
x

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. களம் இல்லாததால் சாலையில் நெல் குவியல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. களம் இல்லாததால் சாலையில் நெல் குவியல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு தாலுகா பகுதியை பொருத்தவரை 6 ஆயிரம் ஏக்கரில் கோடை நடவுப்பணிகள் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கண்மாய்களில் நீர் இருந்ததால் மகிழ்ச்சியுடன் விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்து இருந்தனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொள்முதல் நிலையம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. ஒவ்வொரு அறுவடையின் போது நெற்களம் இல்லாதது, கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது என பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

நெற்களம் இல்லாமல் சாலையில் நெல்லை கொட்டியும், தனியார் இடத்தில் நெல்லை கொட்டியும் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தற்போது தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசால் நெல் ஒரு மூடை ரூ.1,550-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் தற்போது தனியாரிடம் ரூ. 1,400-க்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. .ஒவ்வொரு கால அறுவடையின் போதும் இதேநிலையை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story