நெல் நடவு செய்யும் பணி தொடங்கியது
கூடலூர், சுல்தான்பத்தேரியில் நெல் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
கூடலூர்,
கூடலூர், சுல்தான்பத்தேரியில் நெல் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
நெல் விவசாயம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக கூடலூர் பகுதியிலும் பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நெல் விவசாயமும் களை கட்ட தொடங்கி விடும். நடப்பு ஆண்டில் கேரளா, கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது.இதனால் ஆறுகள் உள்பட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் நெல் விவசாயத்துக்கு தேவையான அளவு நீர்ப்பாசன வசதியும் கிடைத்தது. இந்தநிலையில் மழையின் தாக்கம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக வயல் பரப்புகளை ஏர் கலப்பை கொண்டு உழுதனர். தொடர்ந்து விதை நெல்லை தூவி நாற்றுகள் உற்பத்தி செய்தனர். தற்போது கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கம்மாத்தி, புத்தூர் வயல், தொரப்பள்ளி, பாடந்தொரை, முதுமலை ஊராட்சி ஆகிய இடங்களில் நெல் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.
நாட்டு ரகங்கள்
இதேபோல் கேரள எல்லையான சுல்தான்பத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான நூல்புழா உள்பட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக அடுக்கை, கந்தசால், மரநெல், பாரதி உள்ளிட்ட நாட்டு ரகங்கள் மட்டுமே விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,
நடப்பு ஆண்டில் கனமழை தொடர்ந்து பெய்ததால் வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், மழை அதிகமாக பெய்து வயலில் நீரூற்று ஏற்பட்டு உள்ளதால், நெல் விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது. இதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.