நெல் நடவு எந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்
நெல் நடவு எந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நெல் நடவு எந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருக்குமரேசன், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தோட்டக்கலை, வேளாண்மை துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். சிலர் மனுக்களாகவும் கொடுத்தனர். அந்த மனுவில் வேலூர் மாவட்டத்தில் தேவையான அளவிற்கு மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதிக அளவில் நெல் நடவில் ஈடுபட்டு வருகின்றனர். நடவு பணிக்கு பெண்கள் யாரும் வராததால், விவசாயிகள் நடவு எந்திரத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடவு எந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை வாடகை கேட்கின்றனர்.
மானிய விலையில்
எனவே வட்டார வளர்ச்சி அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி மூலம் நடவு எந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். நிலம் அளக்க முறையான பணம் கட்டியும் நில அளவர்கள் குறித்த நேரத்தில் வருவது கிடையாது. இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே நிலத்தை அளக்க பணம் கட்டியவுடன் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக நிலத்தை அளக்க சர்வேயர்களுக்கு தாசில்தார் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் மணல் கடத்தலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். முடிவில் அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.