கம்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

கம்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரையிலான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி செய்தனர்.

சாகுபடி செய்த நெற்பயிர்கள் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது 75 சதவீத அறுவடை பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் விவசாயிகளை சந்தித்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

62 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையை வியாபாரிகள் உடனடியாக வழங்குவது இல்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாதால் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நெல்லை அரசு கொள்முதல் செய்தால் மூட்டைக்கு ரூ.1,300 வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். அதேபோல் பணமும் வங்கிக்கணக்கில் உடனே வரவு வைக்கப்படும். எனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story