குறுவை பட்டத்துக்கு விதை நெல் மானியத்தில் வினியோகம்
வேளாண்மை துறை சார்பில் குறுவை பட்டத்துக்கு விதை நெல் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
திருவையாறு;
திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் குறுவை பட்டத்துக்கு தேவையான விதை நெல் மற்றும் வேளாண் பண்ணை கருவிகள் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சினேகா கூறியதாவது:-குறுவை, சாகுபடிக்கு வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்- அமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நடப்பு குறுவை, பட்டத்திற்கு தேவையான விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் காலதாமதம் இல்லாமல் விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும், மண்வெட்டி, கடப்பாரை, இருப்புசட்டி, கதிர் அரிவாள், களைகொத்து ஆகியவை 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.