நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு
நாகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நடப்பு ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
நாகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நடப்பு ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
நெல் கொள்முதல்
காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான நாகையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நாகையில் இருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
இதை முன்னிட்டு சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமை தூக்கும் பணியாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் வேகன்களில் ஏற்றினர். இதையடுத்து 42 வேகன்களில் 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் கூறியதாவது:-
இதுவரை...
நாகை மண்டலத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாகை மண்டலத்திற்கு கொள்முதல் இலக்காக நடப்பு ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இன்று (நேற்று) வரை 2 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் ரெயில் வேகன் மற்றும் லாரிகள் மூலமாக வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பு
10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ளது. திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை, சிவகங்கை, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்து நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடையாத வகையில் இயக்கம் செய்யப்படுகிறது. 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கொள்முதல் நிலையம் நாளை முதல் (இன்று) மூடப்படும்.
கொள்முதல் குறைய, குறைய விவசாயிகளின் அனுமதியுடன் எஞ்சியுள்ள கொள்முதல் நிலையங்கள் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.