1,600 எக்டரில் நெல், கரும்பு, சோளம், வாழை பயிர்கள் நாசம்


1,600 எக்டரில் நெல், கரும்பு, சோளம், வாழை பயிர்கள் நாசம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழையால் 1,600 எக்டரில்நெல், வாழை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நாசம் அடைந்தன.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழையால் 1,600 ஹெக்டரில் நெல், வாழை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நாசம் அடைந்தன.

விடிய விடிய மழை

'மாண்டஸ்' புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று முழுவதும் அவ்வப்போது மிதமான மழையுடன் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

பகல் நேரங்களில் கூட இருள் சூழ்ந்த படி இருந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்த படி வாகனங்களை இயக்கினர். வேலைக்கு சென்று வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலம் சமத்துவபுரம் பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை அரசு அதிகாரிகள் அங்குள்ள முகாமில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மரம் விழுந்தது

மேல்வீராணம் கிராமத்தில் இருந்து பாணாவரம் செல்லும் வழியில் உள்ள சிறிய மரம் காற்றின் காரணமாக விழுந்தது.

இதேபோல் வாலாஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து மின் கம்பங்கள் மற்றும் வீடுகளின் மீது விழுந்தது.

மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார்.

நெற்பயிர்கள்

ஒன்றியம் வாரியாக நெற்பயிர்கள் பாதிப்பு எக்டரில் வருமாறு:-

திமிரி-188, காவேரிப்பாக்கம்-659, அரக்கோணம்-460, சோளிங்கர்-52, ஆற்காடு-78 ஆக மொத்தம் 5 ஒன்றியங்களில் 1,437 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் 1,763 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.‌

இதேபோல் கரும்பு பயிரை பொறுத்தவரை திமிரி ஒன்றியத்தில் 42, ஆற்காடு ஒன்றியத்தில் 3 ஹெக்டேரில்நாசமாகின.

நிலக்கடலை பயிர்களை பொறுத்தவரை திமிரி ஒன்றியத்தில் 56 ஹெக்டேரும், சோளிங்கர் ஒன்றியத்தில் 26 ஹெக்டரும், அரக்கோணம் ஒன்றியத்தில் 15 ஹெக்டரும், ஆற்காடு ஒன்றியத்தில் 13 ஹெக்டரும் என 109.91 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை பயிர்கள் நாசமாகின. இதனால் 161 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் திமிரி ஒன்றியத்தில் 0.2 ஹெக்டேர் பரப்பளவில் சோளம் பயிர் நாசமானது. மாவட்டம் முழுவதும் 1,592.11 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின. இதன் காரணமாக 1,988 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், 6 வீடுகள் முழுமையாகவும், 93 வீடுகள் பாதிக்கும் மேல் சேதமடைந்தன. 9 மாடுகள், 2 ஆடுகள் செத்தன.

மழை அளவு

நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ராணிப்பேட்டை- 18.4, அரக்கோணம் - 141.5, மின்னல் - 197.8, ஆற்காடு‌- 66, காவேரிப்பாக்கம்- 109, பனப்பாக்கம்- 195.8, வாலாஜா - 41.2, அம்மூர்- 14, பாலாறு அணைக்கட்டு- 53.4, சோளிங்கர்- 60.8, கலவை- 42.6. மாவட்டம் முழுவதும் சராசரி அளவு 85.5 ஆகும்.=========


Next Story