நனைந்த நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் அவதி


நனைந்த நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் அவதி
x

கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நனைந்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நனைந்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மழையில் நனைந்த நெல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குறுவை அறுவடை பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொள்ள தொடங்கினர். இந்த நிலையில், திடீரென பலத்த மழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. இதையடுத்து மழை நின்றபிறகு வயலில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றினர். அதன்பின்னர், தண்ணீரில் மூழ்கி தரையோடு தரையாக சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்தனர். அப்போதும், மழை குறுக்கிட்டதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மீண்டும் மழையில் நனைந்தது.

காய வைக்கும் பணி

இதனால், அடுத்த கட்டமாக மழையால் நனைந்த நெல்லை சாலைகளிலும், தளங்களிலும் கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய அளவில் வெயில் இல்லை. மாறாக, வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது நெல்லை காய வைத்து கொண்டிருக்கும் போதே திடீரென மழை பெய்தது. இதனால், அறுவடை செய்த போது மழையில் நனைந்த நெல் அடுத்தடுத்து பெய்த மழையால் தொடர்ந்து நனைந்தது.இதனால் நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லில் அதிக ஈரப்பதம் உள்ளதால் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் சூழல் உருவாகுமோ என்ற கவலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.


Next Story