20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
விவசாய தொழிலாளர்கள் சங்க துணைத்தலைவர் ராயமுண்டான்பட்டி ஜீவகுமார்:- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அவ்வப்போது மழை பெய்வதால் நெல்லில் ஈரப்பதம் இருப்பது மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டதால் 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. எனவே அங்கு சீரமைப்பு பணியை விரைவுபடுத்த வேண்டும்.
சிறப்பு ஊக்கத்தொகை
கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்:- குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்த தொகை தீபாவளி பண்டிகைக்குள் கிடைத்தால் செலவுக்கு பயன்படும்.
கலெக்டர்:- இதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.
திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் சின்னதுரை: காரியாவிடுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
கலெக்டர் உத்தரவு
இதையடுத்து காரியாவிடுதியிலும், சோழகம்பட்டியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.