பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்
x

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார்.

வேலூர்

தேசிய வாக்காளர் தினம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 13-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பாட்டுப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கினார். தொடர்ந்து மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து மூத்த பெண், ஆண் வாக்காளர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் தேர்தலில் எவ்வித அச்சம் இன்றியும் மதம், இனம், சாதி, சமூக தாக்கமின்றியும், வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், தேர்தல்பிரிவு தாசில்தார் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story