பத்மஸ்ரீ விருது- பாம்புபிடி வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்றும் பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வ குடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவி உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ பா.ஜ. க சார்பில் நன்றி களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.