பெயிண்டர் அடித்துக்கொலை
சேலத்தில் பெயிண்டரை அடித்துக்கொன்ற நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் பெயிண்டரை அடித்துக்கொன்ற நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டர்
சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). பெயிண்டரான இவர், லாரி பட்டறை ஒன்றில் வாகனங்களுக்கு பெயிண்டு அடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேணுகாதேவி, வைஷ்ணவி என்ற 2 மனைவிகள் உள்ளனர். அவர்களை தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.
சின்னப்பன் தெருவில் விஜயகுமார் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் விஜயகுமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்கள் கைது
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயகுமாரின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விஜயகுமாரை கொலை செய்தது அவருடைய நண்பர்களான சின்னப்பன் தெருவை சேர்ந்த பிரபாகரன் (26), அய்யனார் (33), சிவா (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, ஆங்கில புத்தாண்டு அன்று இரவில் சின்னப்பன் தெரு பகுதியில் விஜயகுமார் தனது நண்பர்களான பிரபாகரன், அய்யனார், சிவா ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து விஜயகுமார் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் பிரபாகரன் உள்பட 3 பேரும் அவரது வீட்டுக்கு சென்று விஜயகுமாரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்றனர்.
கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==