மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் பலி


மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் பலி
x

மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்தது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்தது.

பெயிண்டர்

இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள்பிள்ளை. இவருடைய மகன் சுரேஷ் (வயது 43), பெயிண்டர்.

சுரேஷின் நண்பருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று சுரேஷ் தனது நண்பர்களுடன் வில்லுக்குறி அருகே உள்ள மாம்பழத்துறையாறு அணைக்கு சென்றார்.

அங்கு நண்பர்களுடன் அவர் உணவு சமைத்து சாப்பிட்டார். பின்னர் மதியம் அணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கினார்

அப்போது சுரேஷ் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் தண்ணீரில் தத்தளித்தபடி மூழ்கினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர்.

சோகம்

இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நண்பருக்கு குழந்தை பிறந்ததை கொண்டாட அணை பகுதிக்கு சென்ற பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story