மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்த கண்ணதாசன் மகன் சோலைராஜ்(வயது 32). பெயிண்டரான இவர், மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார். அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.