கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, நத்தம், தொட்டி, அண்ணாநகர், சிவலியாங்குளம், பாரதிநகர் மற்றும் கீழ்குப்பம்வேலூர், அயன்வேலூர், கொரட்டூர், குச்சிப்பாளையம், பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் கூழ் குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதுவே சாகை வார்த்தல் நிகழ்ச்சி ஆகும்.
மிஸ் கூவாகம்
விழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) கோவில் அருகே உள்ள பந்தலடியில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 3-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதன் பின்னர் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1-ந்தேதி மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதல் 2 சுற்றுகள் உளுந்தூர்பேட்டையில் நடக்கிறது. பின்னர் இறுதி சுற்று விழுப்புரத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருங்கைகள் வர இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.