பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைெபற்றது.
தாயில்பட்டி
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிம்மம், அன்னபட்சி, குதிரை, காமதேனு, பூச்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நாடார் இளைஞர் அணி, நாடார் உறவின்முறை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 9-வது நாள் திருவிழாவில் நாடார் உறவின் முறை மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பில் காளி வேடம், கருப்பசாமி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், சிறுமிகள் அம்மன் வேடம் அணிந்தும் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து உறவின்முறை தலைவர் குருசாமி நாடார் தலைமையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நாடார் இளைஞர் அணி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா உடன் விழாநிறைவு பெறுகிறது.