வர்ணம் பூசும் பணி


வர்ணம் பூசும் பணி
x

கும்பகோணத்தில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

முதற்கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.

பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த நிகழ்வானது ஆண்டு தோறும் இந்துக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வர்ணங்கள் பூசும் பணிகள்

வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்தில் சீனிவாசநல்லூர், கும்பகோணம்- திருவாரூர் சாலை, காரைக்கால் சாலை உள்ளிட்ட பகுதிகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.சிலைகள் தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. தற்போது விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசும் பணிகள் நடக்கிறது. வர்ணங்கள் பூசும் பணியை பொருத்தவரையில் முதலில் தெளிப்பு (ஸ்ப்ரேயர்) மூலம் முழுவதும் ஒரு நிறத்தினை கொடுத்து விட்டு அடுத்தக்கட்ட வர்ணம் கொடுக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க வேண்டிய நிலையில் உள்ளதால் தண்ணீர் மாசுபடாத அளவிற்கு நிறம் கொடுக்கின்றனர்.

பொதுமக்களை கவரும் வகையில்...

விநாயகர் சிலைகளுக்கு நிறம் கொடுத்த பின்னர் பொதுமக்களை கவரும் வகையில் கலர்கலராக சாலையோரத்தில் வரிசையாக வைத்துள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 8 பேர் வரை விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக வர்ணம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயார் செய்யும் விநாயகர் சிலைகள் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச்செல்ல உள்ளனர்.

இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இயற்கையான வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது என்றனர்.


Next Story