தஞ்சை அய்யன்குளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் கிழிந்து தொங்கும் நிலை


தஞ்சை அய்யன்குளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் கிழிந்து தொங்கும் நிலை
x

தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட அய்யன்குளத்தில் பொது அறிவை வளர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் கிழிந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட அய்யன்குளத்தில் பொது அறிவை வளர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் கிழிந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

அய்யன்குளம்

தஞ்சையை ஆண்ட மன்னர்கள் தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கு அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். குறிப்பாக சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய வகையில் அகழி அமைக்கப்பட்டது. பரந்து விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழை நீரும் சேமிக்கப்பட்டன.

மேலும் தஞ்சை பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தின் போது மேலவீதி அருகே மிகவும் பிரம்மாண்டமான அய்யங்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான நீர்வழி பாதையும் அமைக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் ஒரு பகுதியாக அய்யன்குளம் ரூ.5 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டன. குளத்தை சுற்றிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தை சுற்றிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

7 ஆயிரத்து 437 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வழி நீர் பாதை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் வழியாக கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த அய்யன்குளம் உடல் நலத்தை பேணுவதற்கும், பொது அறிவை வளர்க்கும் இடமாகவும் திகழ்ந்தது.

கிழிந்து தொங்கும் அவலம்

பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் பக்கவாட்டு சுவற்றில் 64 வகையானஆயக்கலைகள், ஐவகை நிலங்கள், 9 நவரத்தினங்கள் 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்வோரிடம் மட்டுமின்றி பொதுமக்களும், பொது அறிவையும் பெறும் வகையில் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஓவியங்கள் கிழிந்து காணப்படுகிறது. இதனால் நடைப்பயிற்சி செல்வோர் பொது அறிவை வளர்க்கும் இடமாக திகழ்ந்த அய்யன்குளம் தற்போது அதற்கு நேர்மாறாக உள்ளது. எனவே உடனடியாக கிழிந்த ஓவியங்களை சரி செய்ய வேண்டும். மேலும் குளத்தை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். மேலும் ஆங்காங்கே வளரும் செடி கொடிகளை அப்புறப்படுத்தி மீண்டும் குளம் புதுப்பொலிவுடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story