நங்கவள்ளி அருகே, மண்டல பூஜை வழிபாட்டில் பிரச்சினை: பழங்கோட்டை சக்திமாரியம்மன் கோவில் பூட்டி சீல்வைப்பு


நங்கவள்ளி அருகே மண்டல பூஜை வழிபாட்டின் போது ஒருதரப்பினர் கருவறை அருகே உள்ள மண்டபத்தில் வழிபட மற்ற தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பழங்கோட்டை சக்திமாரியம்மன் கோவிலுக்கு பூட்டு போட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

மேச்சேரி:

பழங்கோட்டை மாரியம்மன் கோவில்

நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி ஊராட்சி பழங்கோட்டை கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இந்த கோவில் கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக 48-வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.. இந்த கிராமத்தில் உள்ள 8-க்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் கும்பாபிஷேகத்தின் போது கருவறை அருகே உள்ள குறிப்பிட்ட மண்டபம் பகுதிக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நேற்று நடந்த மண்டல பூஜையின் போது, குறிப்பிட்ட ஒருதரப்பினர் கருவறை அருகே உள்ள மண்டபத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

சீல்வைப்பு

இது குறித்து தகவல் அறிந்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா கோவிலுக்கு வந்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவிலை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் பூட்டி சீல்வைக்கப்பட்ட சம்பவம் நங்கவள்ளி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story