பழனியில் வீடு புகுந்து துணிகரம்: அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை-பணம் கொள்ளை


பழனியில் வீடு புகுந்து துணிகரம்: அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை-பணம் கொள்ளை
x

பழனியில் வீடு புகுந்து அரசு டாக்டரை கத்தியால் குத்தி, 100 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பழனி,

பழனி அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் உதயக்குமார் (வயது 55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் சென்னையில் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு ரேவதி சென்று விட்டார். இதனால் வீட்டில் உதயக்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்தநிலையில், அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் உதயக்குமார் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் இரும்பு கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்தனர்.

கத்திக்குத்து

அங்கு படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த உதயக்குமாரை அவர்கள் தட்டி எழுப்பினர். அவர் கண் விழித்து பார்த்தபோது முகமூடி அணிந்து 3 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உதயக்குமார் திருடன், திருடன் என்று சத்தம் போட முயன்றார்.

அதற்குள் கத்தியை காட்டி அவரை மிரட்டினர். அப்போது மர்ம நபர்களில் ஒருவர் திடீரென்று உதயக்குமாரின் இடது கையில் குத்தினார். அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை சரமாரியாக தாக்கி, பீரோ சாவியை பிடுங்கினர். உதயக்குமாரின் கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டனர்.

100 பவுன் கொள்ளை

பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்தனர். அதனை சாக்கு மூட்டைகளில் வைத்து கட்டினர். பின்பு உதயக்குமாரின் கைகட்டை மட்டும் அவிழ்த்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். உடனே உதயக்குமார் தனது கால்கட்டை அவிழ்த்தார். பின்னர் பழனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த டாக்டரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டி.ஐ.ஜி. விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா 'ஹார்டு டிஸ்க்' திருட்டு

டாக்டர் உதயக்குமார் வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை கொள்ளையர்கள் வேறுபக்கம் திருப்பி வைத்துவிட்டு கைவரிசை காட்டி உள்ளனர். கொள்ளையடித்த பின்பு கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்க்'கையும் திருடி சென்று விட்டது தெரியவந்தது.

டாக்டரை கத்தியால் குத்தி விட்டு 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story