பழனி முருகன் கோவிலில் 'அரோகரா' கோஷம் முழங்க வைகாசி விசாக தேரோட்டம்


தினத்தந்தி 3 Jun 2023 2:30 AM IST (Updated: 3 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் ‘அரோகரா’ கோஷம் முழங்க வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் 'அரோகரா' கோஷம் முழங்க வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வைகாசி விசாகம்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'வசந்த உற்சவம்' என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம் நாளான நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

இந்தநிலையில் வைகாசி விசாக திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருத்தேரில் எழுந்தருளினர். அப்போது சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த தேரோட்டம் பழனி கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, நிலையை அடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் 'பழனி மலை முருகனுக்கு அரோகரா' என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். பூஜைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

தங்கக்குதிரை வாகனம்

தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story