பழனி வரட்டாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?


பழனி வரட்டாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 21 Jan 2023 12:30 AM IST (Updated: 21 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி வரட்டாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

விவசாய ஆதாரம்

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும். பழனி பகுதியில் நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து ஓடைகள் மூலம் செல்லும் தண்ணீர் குளங்களில் நிரப்பப்பட்டு அதனை சார்ந்த விளைநிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது.

அதேபோல் அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வரட்டாறு, பாலாறு, பொருந்தலாறு என பயணித்து சண்முகநதியில் கலக்கிறது. இந்த ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடினால் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. அதேபோல் குளம், ஆறுகளில் மீன் வளர்ப்பும் நடப்பதால் அதை சார்ந்த தொழிலும் நடக்கிறது.

ஆக்கிரமிப்பில் ஆறுகள்

பழனி பகுதியின் விவசாயத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓடை, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சிதறுண்டு கிடக்கிறது. குறிப்பாக குப்பை கொட்டும் இடமாக குளங்களும், புதர்கள் மண்டிய இடமாக ஓடைகளும் மாறியுள்ளது. இதன் விளைவு மழைக்காலத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் பெரும் பிரச்சினை ஏற்படுவதோடு நீர்நிலைகளும் மாசடைகின்றன.

அந்தவகையில் பழனிக்கு வரமாக உள்ள வரட்டாறு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. வரதமாநதி அணையில் இருந்து பழனி சண்முகநதி வரை பயணிக்கும் வரட்டாறு குட்டிக்கரடு, ஆலமரத்துக்களம், மருத்துவர்நகர் ஆகிய பகுதிகள் வழியே செல்கிறது. இதில் பல இடங்களில் ஆற்றின் கரையே தெரியாத அளவுக்கு புதர்மண்டி உள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமித்து காணப்படுவதால் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நிலஅளவீடு

சில இடங்களில் ஆற்றின் நீர்பிடிப்பை ஆக்கிரமித்து தென்னை, மா உள்ளிட்ட மரங்களை சிலர் வளர்த்து வருகின்றனர். இதனால் வரட்டாற்றின் வளம் பறிபோகும் நிலையில் உள்ளது. எனவே வரட்டாற்றின் வளத்தை காக்க வேண்டுமென்றால் அதன் நீர்ப்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் ஆற்றின் இரு கரைகளை சீரமைக்க வேண்டும். இதற்கு பொதுப்பணி, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் என அனைத்து துறை அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி, இயற்கை ஆர்வலர் கூறியதாவது:-

குப்புசாமி (விவசாயி, பழனி):- பழனி மட்டுமின்றி ஆயக்குடி பகுதிக்கும் குடிநீர், விவசாய ஆதாரமாக வரட்டாறு உள்ளது. ஆனால் வரட்டாற்றின் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. எனவே ஆற்றின் நீர்வழிப்பாதை குறித்து உரிய அளவீடு செய்து அதன் கரைகளை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் யாரும் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படும். அதுபோல் ஆற்றின் முக்கிய பகுதிகளில் படித்துறை, சிறிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

முருகன் கோவிலுக்கு தீர்த்தம்

இயற்கை ஆர்வலரான ஜெயன் கருப்பையா (பழனி கோவில் மிராஸ் பண்டாரம்):- பழனியில் புண்ணிய நதியாக சண்முகநதி இருந்தாலும் அதில் சங்கமிக்கும் முன்பு வரட்டாறாய் உள்ள நதியில்தான் பழனி முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய தினமும் தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அதேபோல் வரட்டாறு பகுதியில் உள்ள நந்தவனத்தில் இருந்துதான் முருகப்பெருமானுக்கு மலர்களும் பறித்து செல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்புபெற்ற வரட்டாற்றின் நீர்பிடிப்பில் ஆக்கிரமித்துள்ள புதர்கள், குப்பைகளை அகற்ற வேண்டும். தூய்மையாக வைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story