பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிப்பு
ஜவ்வாதுமலையில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜவ்வாதுமலையில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கள ஆய்வு
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, ராஜ்குமார், மற்றும் முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 6 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து மோகன்காந்தி கூறியதாவது:-
கொற்றவை சிலை
ஜவ்வாதுமலையிலுள்ள ஜமுனாமரத்தூருக்கு அருகே உள்ள கூட்டத்தூர் என்னும் சிற்றூரில் களஆய்வு மேற்கொண்டதில் அங்குள்ள ஏரிக்கு மேலே அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும், 4 நடுகற்களும் உள்ளன. முதலில் கொற்றவை சிலை உள்ளது. நாடுபிடிக்கும் போரில் வெற்றி வேண்டி கொற்றவையை போர் மறவர்கள் வணங்குவது மரபு. அந்த வகையில் பல்லவர் கால கலை நுணுக்கத்துடன் இந்தக் கொற்றவை சிலை உள்ளது.
37 அங்குல உயரமும், 27 அங்குல அகலமும் கொண்ட பலகைக் கல்லில் இச்சிலை அமைந்துள்ளது. இதில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் படிக்கும் அளவிற்கு இல்லாமல் சிதைந்துள்ளன. இச்சிலையானது வலதுபக்கம் முடிக்கப்பட்டக் கொண்டையுடனும், இடது கையை இடுப்பில் ஊன்றியும், வலதுகையில் கத்தியைத் தாங்கியும் உள்ளது. இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மண்ணில் ஆழமாகப் புதைந்துள்ளது.
போர் வீரர்கள்
இரண்டாவது நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இது 37 அங்குல உயரமும், 28 அங்குல அகலமும் கொண்டுள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளது. 3-வது நடுகல் 40 அங்குல உயரமும், 24 அங்குல அகலமும் கொண்டதாக உள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளுடன் போர்க் கோலத்தோடு நடுகல் வீரன் சிதைக்கப்பட்டுள்ளான்.
4-வது நடுகல் 40 அங்குல உயரமும், 27 அங்குல அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்ட கோலத்தோடு நடுகல் வீரன் காட்சித் தருகிறான்.
5-வது நடுகல் 50 அங்குல உயரமும், 27 அங்குல அகலமும் கொண்டதாக உள்ளது. வலது பக்க கொண்டையுடன் வீரன் காட்சித் தருகிறார். வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வீரனின் கழுத்துப் பகுதியில் ஒரு அம்பும், வயிற்றுப்பகுதியில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளது சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள எழுத்துக்களும் தெளிவாக இல்லை.
உடன்கட்டை
இந்த 5 நடுகற்களுக்கும் அருகாமையில் உள்ள எட்டி மரத்திற்கு அருகே இரண்டு நடுகற்கள் உள்ளன. இதில் முதல் நடுகல் 5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வீரன் தனது இரண்டு கைகளால் இரண்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டுள்ளது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள மற்றொரு நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பாகம் மட்டுமே காணக் கிடைக்கிறது. இது விஜய நகர காலத்தை சேர்ந்த உடன்கட்டை நடுகல்லாகும்.
இந்த நடுகற்களை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாற்று செய்திகள் வெளிப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.