பனைப்பொருட்கள் விற்பனை அங்காடி
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பனைப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் தீபக்ஜேக்கப் திறந்து ைவத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் பனைப்பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த அங்காடியை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.இதில் பனங்கற்கண்டு, பனம்பழச்சாறு, சுக்குகாபி, பனை ஓலைப்பொருட்கள், சுக்கு காபித்தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள், கைவினைப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனைப்பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக இந்த அங்காடி விற்பனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், தஞ்சை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குனர் பிரான்சீஸ் தெரசா மேரி, மேலாளர் சாவித்திரி, பனைப்பொருட்கள் பெருவளத் திட்ட அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.