கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை
கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் ஓசன்னா பாடல் பாடி கிறிஸ்தவ மக்கள் பவனியாக சென்றனர்.
குருத்தோலை ஞாயிறு
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், 3-ம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர். மேலும் அந்த 40 நாட்களை லெந்து நாட்களாக கடைபிடித்து, சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். இதேபோல் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறு பண்டிகையாகவும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. மேலும் எருசலேமில் இயேசுகிறிஸ்து கழுதை மீது பவனியாக சென்றதன் அடையாளமாக கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி பவனியாக சென்றனர்.
திருப்பூர் குமரன் ரோடு புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் பங்குதந்தை ஹைசிந்த் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் குருத்தோலைகள் புனிதப்படுத்தப்பட்டு, ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பவனி, குமரன் ரோடு, பார்க் ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. ஆலய துணைத் தலைவர் டோனி அருளுரை வழங்கினார். உதவி பங்குத்தந்தை எட்வின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் பங்குப்பேரவை நிர்வாகிகள் பங்கு மக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சூசையப்பர் ஆலயம்
குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி ஆலய பங்குதந்தை பிலிப் தலைமையில் நடைபெற்றது. கோவை மறைமாவட்ட முதன்மைகுரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் கலந்து கொண்டு சிறப்பு இறைசெய்தி வழங்கினார். இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி புனித சூசையப்பர் ஆலயம் வரை மக்கள் குருத்தோலை ஏந்தியபடி சென்றனர். இதேபோல் குமார்நகர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் ஆயர் ஜி.ஆனந்த்குமார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் ஞாயிறு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில் ஆலய இணை ஆயர் பால்டேவிஸ், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன், பொருளாளர் பிராங்க் பரிமள்ராஜ் மற்றும் ஆலய கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆஷர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா ஆலயத்தில் ஆயர் எட்வின் ராஜ்குமார் தலைமையிலும், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியபடி ஓசன்னா ஓசன்னா பாடல் பாடி பவனியாக சென்றனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.