பெரியபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய தாழை செடிகள்
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக பெரியபட்டினம் கடற்கரை பகுதிகளில் தாழை செடிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக பெரியபட்டினம் கடற்கரை பகுதிகளில் தாழை செடிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
கடல் சீற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் அருகே உள்ள சிங்கிலி தீவு, குருசடைதீவு முதல் தூத்துக்குடி இடைப்பட்ட தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. 21 தீவுகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
அதுபோல் இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் இயற்கையாகவே 3,600 அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர பல வகையான இயற்கை பாசிகளும், தாழை செடிகளும் உள்ளிட்ட பல இயற்கை தாவரங்களும் அதிகமாக வளர்ந்து நிற்கின்றன.இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் வேகமாக காணப்படுகின்றது.
கரை ஒதுங்கிய தாழை செடிகள்
கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் வாலைதீவு, முள்ளி தீவு உள்ளிட்ட தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் இருந்து ஏராளமான தாழை செடிகள் கடற்கரை பகுதி முழுவதும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. கடல் சீற்றம் காரணமாக ஏர்வாடி முதல் கீழக்கரை, சேதுக்கரை முத்துப்பேட்டை, பெரிய பட்டினம் உள்ளிட்ட தெற்கு கடற்கரை பகுதி முழுவதும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தாழை செடிகள் அதிக அளவில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
இது பற்றி மீனவர்கள் கூறும் போது, தென்கடல் பகுதியில் இது போன்று பலத்த சூறாவளி காற்று வீசி கடல் சீற்றமாக காணப்படும்போது தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் உள்ள தாழை செடிகளும், பாசிகளும் கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்தனர்.