இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் பாம்பன் பாலம்
இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் பாம்பன் ரோடு பாலம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் பாம்பன் ரோடு பாலம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம்
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் கடந்த 34 ஆண்டுகளை கடந்து ரோடு பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. அதுபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் உள்ள ஏராளமான மின் விளக்குகள் மாலை 6 மணிக்கு மேல் எரிவது கிடையாது. இதனால் இரவு நேரங்களில் பாலத்தில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமப்படுகின்றன.
விபத்து அபாயம்
குறிப்பாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ரோடு பாலத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலுக்குள் அமைந்துள்ள ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் ரோடு பாலத்தில் இரவு நேரங்களில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனடியாக சரி செய்தும் அனைத்து மின் கம்பங்களிலும் மின்விளக்குகளை எரிய விடுவதற்கு சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.