தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வாழைக்கான விலை முன்னறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாழைக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாழை சாகுபடி
வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் 2 வது முன்கூட்டிய அறிக்கையின் படி 2021-22-ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 23.88 லட்சம் ஏக்கர் வாழை சாகுபடி நடைபெறும். அதன்மூலம் 351.31 லட்சம் டன்கள் வாழை உற்பத்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வாழை சாகுபடியில் 13 சதவீதம் மராட்டியத்தில் நடைபெறுகிறது.இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 11 சதவீதம் வாழை சாகுபடி மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் பொதுவாக தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பூவன், மற்றும் கற்பூரவள்ளி ரகங்கள் சாகுபடியில் இலை அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இலை அறுவடை செய்யும் வாழைகளில் தரமான வாழைத்தார்களை பெற முடியாது. இந்தநிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தில் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய வாழை ரகங்களுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விலை முன்னறிவிப்பு குழு
அதில் கூறியிருப்பதாவது:-
கோவை சந்தைக்கு புதுக்கோட்டை, திருவையாறு மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் உள்ளது. இதுதவிர மேட்டுப்பாளையத்திலிருந்து நேந்திரன் வரத்து உள்ளது. ஆகஸ்டு முதல் கேரளாவிலிருந்து நேந்திரன் வரத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் விலை முன்னறிவிப்புக் குழு கடந்த 17 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடப்பு ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் முடிய தரமான பூவன் வாழையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.18,கற்பூரவள்ளி ரூ.20 முதல் ரூ.22 மற்றும் நேந்திரன் ரூ.38 முதல் ரூ.40 வரை இருக்கும். எனவே மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
---