சூறாவளிக்காற்றுடன் மழை;ஆயிரக்கணக்கான வாழை சேதம்


சூறாவளிக்காற்றுடன் மழை;ஆயிரக்கணக்கான வாழை சேதம்
x
திருப்பூர்


குடிமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வாழை மரங்கள் சேதம்

குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, வாழை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 100 கிமீ வேகத்துக்கு மேல் சுழன்றடித்த சூறைக்காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குடிமங்கலத்தையடுத்த ஆத்துக்கிணத்துப்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆமந்தகடவு, சிந்திலுப்பு, மூங்கிலத்தொழுவு, வாகத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் மற்றும் ஒருசில இடங்களில் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆண்டுப்பயிரான வாழை சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.அதன்படி காற்று அதிகம் வீசும் ஆடி மாதம் போன்ற காலங்களில் மரங்களுக்கு முட்டு கொடுத்து பாதுகாப்பது வழக்கமாகும். ஆனால் தற்போது கோடைக்காலம் என்பதால் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை என்பது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வாக உள்ளது.இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைப் பருவத்திலிருந்த ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்து வீணாகியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கள் நிறைந்திருந்த ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் காற்றினால் உடைந்து விழுந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதனையடுத்து தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

அதிக எண்ணிக்கையிலான வாழை மரங்கள் மற்றும் பப்பாளி மரங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் பயிர் சேதமடைந்த விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் சேத மதிப்பீடு குறித்து ஆய்வு செய்து அரசு நிவாரணத்துக்கு பரிந்துரை செய்ய முடியும.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story