பஞ்சாயத்து உதவி இயக்குனர் வீட்டில் சோதனை; மேலும் ரூ.5¾ லட்சம் பறிமுதல்

பஞ்சாயத்து உதவி இயக்குனர் வீட்டில் சோதனை; மேலும் ரூ.5¾ லட்சம் பறிமுதல்
x

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீட்டில் சோதனை

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக இருப்பவர் உமா சங்கர் (வயது 53). இவர் தீபாவளி வசூல் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் அவரிடமிருந்து ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் தொடர்பாக அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள திருமலை மன்னர் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவர் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. ஆக உதவி இயக்குனர் உமா சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து மொத்தம் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து இயக்குனர் உமா சங்கர் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து தீபாவளி இனாம் வசூல் பணம் மற்றும் வேலை உத்தரவுக்கான லஞ்சம் என ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை உயர்அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story