ஊராட்சி தூய்மை காவலர்கள், குடிநீர் இயக்குபவர்கள் பொதுக்குழு கூட்டம்
ஆரணியில் ஊராட்சி தூய்மை காவலர்கள், குடிநீர் இயக்குபவர்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் இயக்குபவர்கள் (டேங்க் ஆபரேட்டர்கள்) பொதுக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ஜி.குணசேகரன் தலைமையில் நடந்தது.
செயலாளர்கள் பி.சேட்டு, சி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் பி.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் இ.மூர்த்தி, மாவட்ட செயலாளர் எஸ்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12,526 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3600-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சருக்கும், ஊரக உள்ளாட்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள 12,526 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
அனைத்து ஊராட்சிகளிலும் காலி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.