ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இ டெண்டர் முறையை கைவிடக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராமசபைகூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இ டெண்டர் முறையை கைவிடக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராமசபைகூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இ-டெண்டர் முறை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் இப்பணிகளின் அனைத்து உரிமைகளும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இ டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இ டெண்டர் முறையை கைவிடக்கோரி சோளிங்கர் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினத்திடம் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் அளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று 40 ஊராட்சி மன்ற தலைவர்களும் மனு அளித்தனர். அவரும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

புறக்கணிப்பு

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இ டெண்டர் விடப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கலெக்டர் வருகிற 15-ந் தேதிக்குள் முறையான பதில் அளிக்கவில்லை என்றால் 15-ந் தேதி நடக்க இருக்கும் கிராம சபை கூட்டத்தை அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story