ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்


ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.

நாகப்பட்டினம்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை, திருமருகல், கீழ்வேளுர் வட்டார ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:- புதிய அறிவியல் தொழல்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் ஊராட்சிகளின் பொது மக்கள் வரி செலுத்தும் நடைமுறையினை எளிதாக்கும் விதத்தில் இணையதளம் வாயிலாக வரி செலுத்தும் நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்நடைமுறையினை சிறப்பாக செயல்படுத்திட ஊராட்சி மன்றத்தலைவர்கள் உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். ஊராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். ஊராட்சிகள் சார்ந்த பிரச்சனைகள், தேவைகள், தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கலாம்.

திறன்வளர்ப்பு பயிற்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய நிதி, அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் இதர திட்டங்களை விளக்கி ஊராட்சிகளில் இத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்திட உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நாகை, திருமருகல் மற்றும் கீழ்வேளுர் வட்டாரங்களை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தை உளவியல் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களான இளைஞர் நீதி சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் ஆகிய தலைப்புகளில் திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.


Next Story