போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஊராட்சி மன்ற கூட்டம்


போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஊராட்சி மன்ற கூட்டம்
x

கணியம்பாடியில் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி செல்விக்கும், துணை தலைவி சகிலாவுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்து வந்தது. இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தில் வளர்ச்சி பணிகள் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார் சென்றது. அதன்பேரில் கடந்த மாதம் கலெக்டர் கணியம்பாடி ஊராட்சி துணைத் தலைவியின், செக்கில் கையெழுத்து போடும் இணை அதிகாரத்தை சகிலாவிடமிருந்து பறித்து உத்தரவிட்டார். மேலும் தற்போது தற்காலிகமாக 12-வது வார்டு உறுப்பினர் சுனில்குமாருக்கு செக்கில் கையெழுத்து போடும் இணை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்விரவி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சரத்குமார் வரவேற்றார். இதில் 9 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குடிநீர் பராமரிப்பு, பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்றது.


Next Story