ஊராட்சி மன்ற துணைத் தலைவர், 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா


ஊராட்சி மன்ற துணைத் தலைவர், 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
x

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்ததாக குற்றம்சாட்டி துணைத்தலைவர் மற்றும் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கி உள்ளனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்ததாக குற்றம்சாட்டி துணைத்தலைவர் மற்றும் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கி உள்ளனர்.

தலைவர் மீது குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கைலாசகிரி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக ரமணிராஜசேகர் பதவி வகித்து வருகிறார். துணைத்தலைவராக அரவிந்தன் உள்ளார்.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜசேகர் ஊராட்சி மன்ற பொது நிதியில் இருந்து ரூ.30 லட்சத்துக்கு மேல் கையாடல் செய்திருப்பதாகவும், பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை வார்டு வளர்ச்சிக்காக எந்த ஒரு பணியும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும், அரசு பணத்தை பல்வேறு வழிகளில் செலவழித்து வருவதாக துணைத்தலைவர் மற்றும் 11 வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை

இந்தநிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாட்டை கண்டித்து கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந் தேதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசுவுக்கு புகார் கடிதம் ஒன்றை துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 11 பேரும் கையெழுத்திட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த புகார் கடிதம் மீது ஊரக வளர்ச்சித்துறையினர் 7 நாட்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. ஆனால், 2 வாரங்கள் கடந்தும் வார்டு உறுப்பினர்களின் புகார் கடிதம் மீது ஊரக வளர்ச்சித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

12 பேர் ராஜினாமா

இதனால் ஆவேசம் அடைந்த கைலாசகிரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அரவிந்தன் உள்பட 12 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசுவிடம் நேற்று வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாட்டை கண்டித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் கொடுத்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு செய்யப்படுகிறது

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் பொது நிதியில் கையாடல் செய்ததாக ஏற்கனவே புகார் கடிதம் வழங்கியுள்ளனர். அதன் மூலம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறையான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு்ள்ள வரவு - செலவு கணக்கு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அறிக்கை மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்குள்ளாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறி கடிதம் வழங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம். அதேபோல், கைலாசகிரி ஊராட்சியில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையும் கலெக்டர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்' என்றனர்.


Next Story