ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம்:வெள்ளோட்டத்தின் போது குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீர்


ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம்:வெள்ளோட்டத்தின் போது குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீர்
x

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் வெள்ளோட்டத்தின் போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிசய நீரூற்றுபோல் சாலைகளில் வெள்ளம் பீறிட்டு பாய்ந்தோடியது.

ஈரோடு

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் வெள்ளோட்டத்தின் போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிசய நீரூற்றுபோல் சாலைகளில் வெள்ளம் பீறிட்டு பாய்ந்தோடியது.

குடிநீர் திட்டம்

ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சில பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. சில பகுதிகளில் வீடுகள் வரை குழாய்கள் போடப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

சில பகுதிகளில் இப்போதுதான் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி ரங்கம்பாளையம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது.

பீறிட்டு பாய்ந்த வெள்ளம்

இந்த குழாய்களில் தண்ணீர் வினியோகத்துக்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது. குழாய்களில் தண்ணீர் ஓடிய சில நிமிடங்களிலேயே குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. டாக்டர் ஆர்.ஏ.என்.எம்.கல்லூரி நுழைவுவாயில் எதிரில் ஆர்ட்டீசியன் அதிசய நீரூற்று போல வெள்ளம் பீறிட்டு அடித்தது.

ஒரே பகுதியில் 2 இடங்களில் வெள்ளம் பீறிட்டு பாய்ந்தது. இதனால் அந்த ரோடு வழியாக 2 சக்கர வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சில வாகன ஓட்டிகள் தங்கள் 4 சக்கர வாகனங்களை தண்ணீர் பீறிட்டு பாய்ந்த இடத்தில் விட்டு கழுவினார்கள். சுமார் 1 மணி நேரம் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல பாய்ந்து சாக்கடையில் கலந்தது.

நடவடிக்கை

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கூறி, குழாயில் தண்ணீர் வினியோகத்தை தடுத்தனர். இதுபோல் வீடுகளுக்கான இணைப்புகளும் தொட்டிகளுடன் இணைக்கப்படாமல் விட்டதால் தண்ணீர் வீணாக சாலையில் ஓடையாக ஓடியது.

இதுபற்றி அந்த பகுதியினர் கூறும்போது, 'வெள்ளோட்டத்தின் போதே குழாய் முழுமையாக உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது என்றால் தரமில்லாத வேலையை செய்து இருக்கிறார்கள். எனவே குழாய் பதித்த ஒப்பந்ததாரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இன்னும் சில நாட்கள் கழித்து உடைப்பு ஏற்பட்டு இருந்தால் பொதுமக்கள்தான் குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கும். எனவே இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை தேவை' என்றார்கள்.


Next Story