மாவட்ட ஊராட்சிக்குழு நிதி ரூ.7 கோடியை திரும்ப பெற வேண்டும்
வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7 கோடி மாவட்ட ஊராட்சிக்குழு நிதியை திரும்ப பெற வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7 கோடி மாவட்ட ஊராட்சிக்குழு நிதியை திரும்ப பெற வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு அதன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் மாரிமுத்துராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் காவேரி, செல்வராஜ், கந்தசாமி, சத்யா சேட்டு, மாது சண்முகம், தீபா முருகன், சரளா சண்முகம், குமார், மாது, சரவணன், கால்நடை துறை இணை இயக்குனர் மணிமாறன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பேசுகையில், தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. மக்களுக்கு எந்த திட்டத்தையும் எங்களால் கொண்டு வர முடியவில்லை. மாவட்ட ஊராட்சி குழுவின் நிதி ரூ.7 கோடி கொரோனா காலக்கட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வேறு பணிகளுக்கு செலவு செய்தது. அந்த நிதியை கேட்டு வாங்கி மாவட்ட கவுன்சிலர்களின் வார்டு நிதிக்கு ஒதுக்க வேண்டும்.
ஆடு வழங்க டோக்கன்
நாகமரை ஊராட்சி கருங்காலி மேடு பகுதியை சேர்ந்த 2 விதவை பெண்களுக்கு இலவச ஆடு வழங்குவதாக டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கி 2 மாதம் ஆகியும் இதுவரை ஆடு வழங்கவில்லை. எனவே ஆடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து வார்டுகளில் புதிய மின் கம்பங்கள் நடுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கின்றனர். நாங்கள் ஒரே தொகையாக செலுத்த நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கூட்டத்தில் தலைவர் பேசுகையில், உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கலெக்டரை நேரில் சந்தித்து வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி நிதியை திரும்ப பெற வலியுறுத்துவோம். ஆடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி கம்பம் நடுவதற்கு தேவையான தொகை செலுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.