ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் ஈரோடு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள்


ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம்  ஈரோடு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள்
x

குழாய் பதிக்கும் பணிகள்

ஈரோடு

ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தையொட்டி ஈரோடு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு ரூ.484 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பு மூலமாக வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்தநிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

135 லிட்டர் குடிநீர்

ஊராட்சிக்கோட்டை அருகே வரதநல்லூரில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிக்கப்படும் குடிநீர் 22.8 கிலோ மீட்டர் தூரம் குழாய் மூலமாக ஈரோடு சூரியம்பாளையத்தில் உள்ள 42 லட்சம் கொள்ளளவு கொண்ட தொட்டிக்கும், வ.உ.சி. பூங்காவில் உள்ள 118 லட்சம் கொள்ளளவு கொண்ட தொட்டிக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த 2 பிரமாண்ட தொட்டிகளிலும் இருந்து 21 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிக்கும், 46 பழைய மேல்நிலை குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டம் மூலமாக ஈரோடு மாநகராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவக்குமார், மின்சார வாரிய கோட்ட பொறியாளர் எஸ்.ராமசந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story