பஞ்சாயத்து தலைவர் சரமாரி வெட்டிக் கொலை
கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகி உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகி உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாயத்து தலைவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 65). விவசாயியான இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இவர் நேற்று காலையில் திட்டங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் மதியம் தெற்கு திட்டங்குளம்-விஜயாபுரி ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார்.
சரமாரி வெட்டிக்கொலை
அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் திடீரென்று பொன்ராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறந்த பொன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பா.ஜனதா நிர்வாகி உள்பட 2 பேரிடம் விசாரணை
இதற்கிடையே பொன்ராஜ் கொலை தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற பா.ஜனதா நிர்வாகி வலியுறுத்தியதாகவும், அப்போது பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜிக்கும், பா.ஜனதா நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த முன்விரோதத்தில் பொன்ராஜ் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாலைமறியலுக்கு முயற்சி
இந்த நிலையில் பொன்ராஜ் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பொன்ராஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்ததின்பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போலீஸ் குவிப்பு
கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திட்டங்குளம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அந்த பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோது, பொன்ராஜின் மனைவி பொன்னுத்தாய் வென்றார். பொன்ராஜ் எப்போதும் தலையில் தலைப்பாகை அணிந்து இருந்ததால், அவரை தலைப்பாய் கட்டு தலைவர் என்று அப்பகுதியினர் அழைத்து வந்தனர்.
---