ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கணவருடன் ஊராட்சி தலைவி தர்ணா
தன்னிச்சையாக ஊராட்சி செயலாளர் செயல்படுவதாக கூறி அவரை மாற்ற வேண்டும் என ஊராட்சி தலைவி கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆரணி
தன்னிச்சையாக ஊராட்சி செயலாளர் செயல்படுவதாக கூறி அவரை மாற்ற வேண்டும் என ஊராட்சி தலைவி கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டார்.
ஊராட்சி மன்றம்
ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தேரியில் ஊராட்சி மன்ற தலைவியாக ஹேமாவதி வாசுதேவன் உள்ளார். துணைத் தலைவர் உள்பட 9 ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலலாக ஊராட்சி மன்ற செயலாளராக சி. வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை சித்தேரி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற இருந்தது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தனர் சிறிது நேரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமாவதி வாசுதேவன் தன் கணவருடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''ஊராட்சி செயலராக பணிபுரியும் வெங்கடேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். எனக்கு எந்த ஒரு மரியாதையும் கொடுப்பதில்லை ஒன்றியத்தில் நடக்கும் எந்த தகவல்களும் எனக்கு தெரிவிப்பதில்லை, தன்னிச்சையாக அவர் நிர்வாகம் செய்கிறார். எனவே அவரை இடமாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் மனுவும் அளித்துள்ளேன்'' என்றார்.
தனிப்பட்ட பிரச்சினை
ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கேட்ட போது ''கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து குறைகள் இருந்தால் மன்ற கூட்டத்தில் தெரிவிக்கிறோம். தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊராட்சி மன்ற தலைவி இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஊராட்சி மன்ற கூட்டம் குறித்து ஊராட்சி செயலர் இன்றைக்கும் கூட்டம் என்று அழைப்பு விடுத்ததின் பேரில் நாங்கள் வந்திருந்தோம்'' என்றனர்.
தீர்மானம் நிறைவேற்றினால் நடவடிக்கை
இதுகுறித்து ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இல. சீனிவாசன் கூறுகையில், ஊராட்சி தலைவி கோரிக்கையை கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. கலெக்டரிடம் இருந்து வந்த கடிதத்தில் இந்த பிரச்சினையில் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ஊராட்சி செயலாளரை மாற்றுவதாக தெரிவ்க்கப்பட்டுள்ளது.