ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சி செயலாளர்களை பணியில் அமர்த்தும் அதிகாரமும், பணியில் இருந்து நீக்கும் அதிகாரமும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வசம் இருந்த நிலையில், பணியாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களால் பணிநீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்தது. அதை எதிர்த்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஊராட்சி செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் தடையாணை பெற்றதோடு, இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்றுவருவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும், காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அவர்களின் பணிவிதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story