ஓமலூர் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


ஓமலூர் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x

ஓமலூர் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

சேலம்

ஓமலூர்:

ஊராட்சி செயலாளர்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சிக்கம்பட்டி ஊராட்சி ஸ்ரீரங்ககவுண்டர் மகன் ஆறுமுகம் (வயது 58). இவர், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்துள்ளார். அந்த வீடு கட்டி முடித்த பிறகு கடைசி பில் தொகை வாங்குவதற்காக ஊராட்சி செயலாளரான ரெட்டிபட்டியை சேர்ந்த ராஜசேகர் மகன் கவுரிசங்கரை (44) தொடர்பு கொண்டார்.

அப்போது ரூ.3 ஆயிரம் தந்தால்தான் பில் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் முறையிட்டார்.

கைது

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஊராட்சி செயலாளர் கவுரிசங்கரிடம், ஆறுமுகம் கொடுத்தார். அதனை கவுரிசங்கர் வாங்கும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக கவுரிசங்கரை பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

கவுரிசங்கர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story