தேவியாக்குறிச்சியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தலைவாசல்,
ரூ.5 லட்சத்தில் சாக்கடை கால்வாய்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அமுதா உள்ளார். இவருடைய கணவர் ஜெயக்குமார் (வயது 54). இவர் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். ஊராட்சி மன்ற செயலாளராக சின்னசாமி (47) உள்ளார்.
இந்த நிலையில் தேவியாக்குறிச்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்பவர் அங்குள்ள ஆண்டவர் நகரில் ரூ.5 லட்சத்தில் ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டார். இந்த பணிக்காக அவர் ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் கேட்டுள்ளார்.
ரூ.55 ஆயிரம் லஞ்சம்
அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமி ஆகியோர் 13 சதவீதம் கமிஷனாக தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ஒப்பந்ததாரர் செந்தில்குமார் வந்தார். அவர் ரூ.55 ஆயிரம் கமிஷன் தொகை கொண்டு வந்துள்ளதாக, அங்கிருந்த ஊராட்சி செயலாளர் சின்னசாமியிடம் தெரிவித்துள்ளார். சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜெயக்குமாருக்கு போன் செய்து, பணத்தை பெற்று கொள்ளட்டுமா? என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.
அதிரடி கைது
இதையடுத்து செந்தில்குமார், சின்னசாமியிடம் ரூ.55 ஆயிரத்தை வழங்கினார். இதனை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை செய்தனர். மேலும் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணியில் இருந்த ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி பர்வீன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமார், சின்னசாமி ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ.5 லட்சம் சாக்கடை கால்வாய் பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.