பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் துணைத் தலைவரை மாற்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு
பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் துணைத் தலைவரை மாற்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சி உள்ளது. தலைவராக அமுதா தட்சிணாமூர்த்தியும், துணைத் தலைவராக முகமது மத்தின் என்பவரும் இருந்து வருகிறார்கள். ஊராட்சி கூட்டத்தின்போது வரவு, செலவு உள்ளிட்ட தீர்மானத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கூட்டாக கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் கடந்த 4 மாதமாக துணைத் தலைவராக உள்ள முகமது மத்தின் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலில் கையெழுத்து போட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சியில் நிறைவடைந்த பணிகளுக்கு பணத்தை எடுக்க முடியாத சூழல் இருந்து வந்தது.
இதனால் பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிதாக வேறு ஒரு நபரை துணை தலைவராக தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் அதன் தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்தது.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட துணைத் தலைவர் முகமது மத்தின் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய கணவர் பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், வரும் காலங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் கூட்டாக கையெழுத்திடும் தீர்மானத்தில் கையெழுத்து போடுகிறேன் என கூறியதோடு, தொடர்ந்து துணைத்தலைவராக நான் செயல்பட வாய்ப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று துணைத் தலைவர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு கூட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லியாகத் அலி, ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி சாமிநாதன், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணைத் தலைவரை மாற்ற வேண்டி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.