அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி


அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
x

ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குப்பையன்பட்டி, ஆதிதிராவிடர்காலனி, நரியணிப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். 110 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இந்த பள்ளியில் 3 கட்டிடத்தில் 6 வகுப்பறைகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பள்ளி கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களையும் ஒன்றாக அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மாணவர்கள் உட்காருவதற்கு கூட இடப்பற்றாக்குறையாக இருப்பதால் பள்ளிக்கட்டிடத்தின் வெளியில் உள்ள திண்ணையில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தற்போது கோடைகாலம் என்பதால் மின் விசிறி இல்லாமலும் படிப்பதால் எழுதவோ படிக்கவோ மாணவர்கள் மிகுந்த சிரமப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளது

குப்பையன்பட்டியை சேர்ந்த பெற்றோர் மலையாண்டி:- குப்பையன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் என்னுடைய குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 3 கட்டிடங்களில் 6 வகுப்பறைகளை கொண்டு இயங்கி வந்தது. இதில் 2 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடத்தில் கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் மழை பெய்த நேரத்தில் மேற்கூரையில் மழைநீர் ஒழுகியதுடன் பல்வேறு இடங்களில் சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து விழுந்தது. கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளதால் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்தின் வகுப்பறைகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியான நிலையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், பள்ளி வளாகத்திற்குள் பழுதடைந்த நிலையில் குப்பையன்பட்டி கிராம ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களையும் இடித்து விட்டு ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடமும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடமும் கட்ட மந்தைப்பிடாரியம்மன் கோவில் அருகே பழைய அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்த இடத்தில் தேவையான அளவிற்கு அரசு இடம் உள்ளதால் அந்த இடத்தில் இரண்டு அலுவலக கட்டிடங்களையும் கட்ட வேண்டும். அப்படி அங்கு கட்டினால் இடவசதி குறைவாக உள்ள நடுநிலைப்பள்ளிக்கு தேவையான கூடுதல் இடவசதி கிடைக்கும். பின்னர் அந்த இடத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தினை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக கட்டிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளையாட்டு மைதானம்

கண்ணையன்:- இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் என்பது கிடையாது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வயதில் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் விளையாட மைதானம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், பழுதடைந்த கழிவறை ஆகிய கட்டிடங்களை இடித்து விட்டு பள்ளி வளாகத்தின் ஒரு ஓரத்தில் புதிதாக கட்டிடங்களை கட்டினால் மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்தை உருவாக்கலாம். இதனால் மாணவர்கள் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதால் மனதளவிலும், உடலளவிலும் திறமையுள்ள மாணவர்களாக வளர்வதற்கு விளையாட்டு மைதானம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

கழிவறை வசதி

ரேவதி:- இந்த பள்ளியில் கழிவறை வசதி கிடையாது. இருக்கும் கழிப்பறையும் பழுதடைந்த நிலையில்தான் உள்ளது. கழிவறை இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் எங்களுடைய குழந்தைகள் தயக்கத்தோடு பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆகையால் பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் இப்பள்ளிக்கு உடனடியாக நவீன கழிவறைகள் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய கட்டிடம் வேண்டும்

முத்துக்குமார்:- எனது குழந்தைகள் இந்த பள்ளியில்தான் பயின்று வருகின்றனர். பள்ளியில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து படிக்கும் அளவிற்கு இடவசதி இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று எங்களது குழந்தைகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் போதிய வகுப்பறை இல்லாமல் இதே நிலைமை நீடிப்பதால் தேர்வுகளில் மதிப்பெண் குறைவதோடு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பழுதடைந்த பள்ளி கட்டிடம் சம்பந்தமாக துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் 5-ம் வகுப்பு வரை தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நாற்காலிகள் வழங்கிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே போதிய அளவு வகுப்பறைகள் வசதி இல்லாததால் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

நிதி ஒதுக்கப்படும்

புதுக்கோட்டை ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன்:- குப்பையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தேவையான புதிய கட்டிடம் கட்டுவதற்கு இந்த கல்வி ஆண்டில் நிதி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story