தூக்கில் பிணமாக தொங்கிய ஊராட்சி பெண் உறுப்பினர்


தூக்கில் பிணமாக தொங்கிய ஊராட்சி பெண் உறுப்பினர்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே ஊராட்சி பெண் உறுப்பினர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே ஊராட்சி பெண் உறுப்பினர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

ஊராட்சி பெண் உறுப்பினர் திடீர் மாயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வண்டலூர் ஊராட்சி பரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம். இவருடைய மனைவி சியாமளா தேவி(வயது 27). இவர், வண்டலூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். நல்லசிவம் திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தேவி திடீர் என்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது தாய் வாசுகிக்கு அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாசுகி நேற்று காலை பரப்பனூருக்கு வந்து தனது மகளை தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இதற்கிடையே பரப்பனூரில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசில் வாசுகி புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் தேவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்து அந்த வாலிபரின் பெற்றோர் தேவியிடம் தகராறு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தேவி வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி பெண் உறுப்பினர் திடீர் என்று மாயமானதும், அவர் தூக்கில் பிணமாக தொங்கியதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story